”தமிழ் வலைப்பூக்கள் ஒருங்கிணைக்கப்படவேண்டும் என்ற அவாவில் உருவாக்கப்பட்ட அட்டவணையானது திரட்டியாக மறுவடிவம் பெற்றது என்பது வரலாறு. ஆங்கிலம் போன்று உலகலாவிய மொழியில் ஏன் திரட்டிகள் பிரபலமாகவில்லை என்ற கேள்விக்கு நான் சொல்லிக்கொள்வதெல்லாம் ஒன்றுதான். அது இயலாத காரியம். 4000 மெம்பர்கள், ஆயிரம் ஆக்டிவ் மெம்பர்கள் உள்ள தமிழ் பூவுலகுக்கே 10 நிமிடம் மட்டுமே பதிவு தெரிகிறது என்கிற பிரச்சினை நிலவுகையில் 15 மில்லியன் அல்லது ஒன்றரைக்கோடி ஆங்கில வலைப்பூக்களைத் திரட்டினால் பதிவுகள் மைக்ரோ செகண்டுகள் கூட தாங்காது என்ற உண்மையை உணரவேண்டும். இன்னும் சொல்லப்போனால் அது அங்கு சாத்தியமற்ற ஒன்று! அதனாலேயே பிளாக் லைன்ஸ் போன்ற உபயோகிப்பாளர் விருப்பம் சார்ந்த பதிவுகளைத் திரட்டும் சேவையைத் தந்தனர் எனலாம்.
தமிழில் இன்று பல திரட்டிகள் வந்தாலும் பெரும்பான்மையான மக்கள் பார்க்கும் திரட்டியாக இன்றும் வலம் வருவது தமிழ்மணம் மட்டுமே. காரணம் டெக்னாலஜி என்று நிச்சயம் சொல்லமுடியாது. அவ்வகையில் பார்த்தால் தேன்கூடு இன்னொரு தமிழ் ப்ளாக்லைனாக வரக்கூடிய அளவுக்கு விருப்பம்சார் திரட்டியாக இயங்கவல்ல முறையில் உருவாக்கப்பட்டது. திரு சாகரன் அவர்கள் அகால மறைவுக்குப் பின் அதன் வளர்ச்சி மட்டுப்பட்டு இருந்தாலும் ஒரு சரியான வல்லுனர்குழு பொறுப்பேற்று குழுவாக இயங்கினால் அது இந்தியாவின் நிகரற்ற தேசி திரட்டியாக மாற வாய்ப்புள்ளது.
அடுத்து தமிழ்வெளியைச் சொல்லவேண்டும். தமிழ்மணத்தின் ஆரம்ப ஆதரவோடு வந்துள்ளதாகச் சொல்லப்பட்டாலும் அதை நிர்வகிப்பவர் ஒரு மிகச்சிறந்த தொழில்நுட்ப இணைய மென்பொருளாளர் என்ற முறையில் அதன் புதுமைகள் புகுத்தப்படும் தன்மை, வளர்ச்சி போன்றவைகள் எதிர்காலத்தில் நிச்சயம் தொடரும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மேலும் இத்திரட்டியில் நம் பின்னூட்டங்களும், பதிவுகளும் நம் பூவில் எந்த மாற்றங்களையும் செய்யத் தேவையில்லாத அளவில் மிகவிரைவாக திரட்டப்படுவதும் இன்றும் பலருக்கும் பிடித்தமான ஒன்றாக இருக்கிறது.
மேலும் தமிழ்கணிமை, திரட்டி, தமிழ்பதிவுகள் போன்றவைகளும் வரத்துவங்கியுள்ள நிலையில் தமிழ்மணம் இன்னும் கோலோச்சுவதன் காரணம் என்ன என்று பார்த்தோமானால் அவர்கள் முன்னோடிகள் என்ற தகுதியை உடையவர்கள். மேலும் தேன்கூடு தவிர்த்து அனைத்து திரட்டிகளும் இவர்கள் செய்யும் அதேவேலையையே செய்கிறார்கள் என்ற காரணத்தால் வாசகர்கள் ஆதரவு தமிழ்மணத்தையே நம்பர் ஒன் திரட்டியாக முதலாமிடத்தில் வைத்திருக்கிறது. ஆனால் இதில் ஒரு அபாயமும் அபத்தமும் காத்திருக்கிறது எனலாம்.
சமீபகாலமாக அதன் செயல்பாடுகள் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகிவருவது கவனிக்கத்தக்கது. தமிழச்சி, ஓசை செல்லா, லக்கி, அய்யனார், ஜ்யோவ்ராம் சுந்தர் போன்ற பதிவர்களின் மாற்று எழுத்துக்களுக்கு மதிப்பளிக்காமல் மழலையர் திரட்டி போல “குழந்தைகளும் படிக்கிறார்கள்” என்றெல்லாம் சொத்தைவாதங்களை வைத்துக்கொண்டு பலரும் கூப்பாடு போடும் வேளையில் படைப்பாளியை சிறுதும் மதிக்காமல் நடவடிக்கை எடுக்கும் மேட்டிமைத்தனம் சுகுணா திவாகர் போன்ற ஒரு சில படைப்பாளிகளை எவ்வளவு எரிச்சலுக்குள்ளாக்கியிருக்கிறது என்று பார்க்கவேண்டும்.
பொதுவாகவே இணையம் என்ற ஊடகத்தில் காமக்கதைகள் படிக்க தமிழ்மணம் வருவார்கள் என்பது எவ்வளவு பைத்தியக்காரத்தனம். அதே வார்த்தைகளை கூகிளில் அடித்தால் மிகமிக அழகான அல்லது அருவருப்பான காமக்கதைகளுக்கு இட்டுச்செல்லும் என்பதை பதின்ம வயது இணையம் மேயும் பாலகர்கள் கூட அறிவார்கள். இங்கியங்கும் பதிவர்களுக்கே கூட பாலியல் அறிவு, பாலியல் அழகு, பாலியல்/ஒழுக்கவியல் அதிர்ச்சி போன்றவற்றை படிக்க நல்ல ஒரு வாய்ப்பு என்ற வகையிலேயே ஜ்யோவ்ராமின் பதிவுகள் மிக நல்ல வரவேற்பை பெற்றன எனலாம். இன்னும் சொல்லப்போனால் இவர்கள் அவரின் வரிகளுக்கு நட்சத்திரமிட்டு என்ன சாதித்தார்கள் என்று ஒன்றும் புரியவில்லை. **** கதைகள் என்றால் அனைவருக்கும் இனி புரியத்தானே போகிறது போங்கள். இம்மாதிரி விசயங்களை தான் எழுதும் எழுத்துக்கு சிந்தனைக்கு முழுப்பொறுப்பு எடுத்து எழுதும் முகமுள்ள சுகுணாக்களுக்கும், தமிழச்சிகளுக்கும், ஓசை செல்லாக்களுக்கும் ஜ்யோவ்ராம் சுந்தர்களுக்கும் ஒரு சின்ன முன்னெச்சரிக்கை கூட இல்லாமல் ஏதோ அனானி ஆட்டக்காரர்கள் மாதிரி நடத்தும் இவர்கள் மனப்பான்மை நிச்சயம் மாறவேண்டும். ஒரு தமிழ்மணம் போல் இன்னொரு தேன்கூடு வரலாம், திரட்டலாம், ஆனால் ஒரு சுகுணாவையோ, செல்லாவையோ, வளர்மதியையோ பிரதியெடுப்பது சாத்தியமா என்பதை மரியாதையின்றி மட்டுறித்தி.. முன்னெச்சரிக்கை.. சீ எழுதவே அசிங்கமாக இருக்கிறது.. முன் தகவல் இன்றி இந்த படைப்பாளிகளை அலட்சியப்படுத்த நினைக்கும் தமிழ்மணப் படிப்பாளிகள் உணரவேண்டும்.
சுயசிந்தனை, தன்மானம், தமிழார்வம் உள்ள பதிவர்கள் இந்த மாதிரியான மேட்டிமைத்தன்மை வாய்ந்த ஒரே ஒரு திரட்டியை இனியும் வளர்ப்பது என்பது ஒரு மோனோபொலி பிற்போக்கு செயாலாகவே முடியும் என்பதை ”இந்தப்பதிவை தமிழ்மணம் நீக்குமா” என்றெல்லாம் வரும் சில இலகுப் பதிவுகளின் தலைப்புகளில் உள்ள அச்சமே உறுதிசெய்கிறது எனலாம். எனவே பதிவர்களும் வாசகர்களும் தமிழ்மணத்தோடு மற்ற திரட்டிகளையும் ஆதரிக்கவேண்டிய சூழலை உருவாக்கவேண்டும். ஒவ்வொரு பதிவரும் தங்கள் வலைப்பூவில் தமிழ்மணத்தோடு, தேன்கூடு, தமிழ்வெளி, தமிழ்க்கணிமை, தமிழ்ப்பதிவுகள், திரட்டி என்ற பல திரட்டிகளுக்கும் தொடுப்புக்கொடுப்பதோடின்றி மற்ற திரட்டிகளையும் தினமும் ஒரு முறையாவது பார்வையிடவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த திரட்டிகளுக்கும் சில நூறு ஹிட்கள் வரும்பொழுது அவர்களும் புதிய யுத்திகளை புகுத்த முயல்வார்கள். இல்லையேல் மைக்ரோசாஃப்ட் டெக்னாலஜிக்கு/புதுக்கண்டுபிடிப்புகளுக்கு எப்படி சுமையாகிப் போனதோ அதேபோல தமிழ் இணைய வலைப்பூ ஊடகத்திற்கு தமிழ்மணம் சுமையாக வாய்ப்புள்ளது. இப்படிச் செய்தால் ஒரு மோனோபொலி அல்லது தனித்திரட்டி சர்வாதிகாரம் இனிமேலும் வளர வாய்ப்பில்லாமல் தமிழ் மாற்றுச் சிந்தனைகளும் எழுத்துக்களும் வாழ்வாங்கு வாழும் என்று கூறி எனது இந்த முழுநீள கட்டுரையை பொறுமையாக படித்த உங்கள் அனைவருக்கும் நன்றி கூறி முடிக்கிறேன். வெல்க தமிழர்களின் மாற்றுச்சிந்தனைத்தளம். வாழ்க இணையத்தமிழ் சூழல்.
அன்புடன்
ஓசை செல்லா
(நூறு பேருக்கு மேல் பார்த்தும் யாரும் மறுமொழியிடவில்லை! அவ்வளவு பயமா இணிஅய்த்தில் எழுத. சரி போங்கள். அனானியாகவாவது சொல்லிவிட்டுப்போக ஏதுவாக அனானி ஆப்சன் ஆன் செய்யப்பட்டுள்ளது)